November 2025

 வடமேற்கு மண்டலம்



நவம்பர் 21 பகாஹா பணித்தளத்தில் 'எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாதே" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற கூடுகையில் 30 பேரும், தொடர்ந்து சப்ராவில் நடைபெற்ற கூடுகையில் 9 பேரும் பங்கேற்றனர். பகாஹா பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் அங்கு செயல்பட்டுவரும் தையற்பயிற்சி மையக் கட்டிடப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 22 பணித்தளங்களில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில், பகாஹா பணித்தளத்தில் 48 பிள்ளைகளும், ராம்நகர் பணித்தளத்தில் 25 பிள்ளைகளும் கலந்துகொள்ளுகின்றனர். சக்வத் டிஹியா ஜெம்ஸ் பகற் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் 70 குழந்தைகள் கலந்துகொண்டனர். சிறுவர்கள் தவறான வழிகளில் சிக்கிக்கொள்ளாமலிருக்கவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 23 பெத்தியா பணித்தளத்தில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 300 சகோதரிகள் கலந்துகொண்டனர். 'நீ ஆயத்தமாகு; மற்றவர்களையும் ஆயத்தப்படுத்து" என்ற தலைப்பின் கீழ் செய்திகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தினங்கள் பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 250 சகோதரிகள் பங்கேற்றனர். கூடுகைகளில் பங்கேற்ற பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவை அவர்கள் வெளிப்படுத்தவும் மற்றும் சமுதாயத்தில் சாட்சியாக வாழவும் ஜெபிப்போம். 

நவம்பர் 24 பைரோகஞ்ச், வால்மீகிநகர், ராம்நகர், பகாஹா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும், ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். கோபால்கஞ்ச், வால்மீகிநகர் மற்றும் ரக்சௌல் ஆகிய பணித்தளங்களுக்கு ஏற்ற ஊழியர்களை கர்த்தர் தரவும், இங்கு நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 25 கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 53 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! மஜௌலியா பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லக் கட்டிடப் பணிகள் விரைவில் நிறைவுபெற ஜெபிப்போம்.