October 2025

                                                 வடமேற்கு மண்டலம்



அக்டோபர் : 22 ராம்நகர் மற்றும் கோடாசஹன் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இளைஞர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில் 115 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்று, தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். ராம்நகர், பைரியா, கோடாசஹன் மற்றும் பைரோகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஞாயிறுப் பள்ளிகளில் சுமார் 160 சிறுவர் சிறுமியர் பங்கேற்றுவருகின்றனர். பக்ஹா பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவர் பின்தொடர் ஊழியத்தின் மூலமாக 55 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தள விசுவாசிகள் கிறிஸ்துவில் நிலைத்து நிற்கவும், சிறுவர் சிறுமியர் வாயிலாக அவர்கள் குடும்பங்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 23 ஜகதீஷ்பூர், பைரியா, ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில் சுமார் 300 பேர் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசம் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். பக்ஹா, பைரோகஞ்ச், ராம்நகர், பேரஹனி, சியூட்டஹா மற்றும் நர்கட்டியாகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் கடந்த மாதம் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக, சுமார் 700 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 18 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

அக்டோபர் : 24 நைத்தன், மஜௌலியா, பக்ஹா, சுகௌலி, யோகாபட்டி, ஹசன்பஜார் மற்றும் சபாபூர்  ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களில் சுமார் 600 பேர் பங்கேற்றனர். பெண்கள் மூலமாக பணித்தள கிராமங்களில் கிறிஸ்துவின் சாட்சி பரவவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில், ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்படவும், விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 25 பேரஹ்னி பணித்தளத்தில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற சுவிசேஷக் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர்; 5 குடும்பத்தினர் புதிதாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செப்டம்பர் 5 அன்று பைரோகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 50 குடும்பத்தினரும், செப்டம்பர் 8 அன்று சன்பட்டியா மற்றும் சாத்தி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 10 குடும்பத்தினரும் பங்கேற்றனர். வசனத்தின்படி குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பது குறித்த போதனை பங்கேற்றோர்க்கு பயனளித்தது. 

அக்டோபர் : 26 பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள், வேத வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்காகவும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.