July 2025

                                வடமேற்கு மண்டலம்


ஜுலை 22 ஜுன் 5 அன்று, ஹர்னடன்ட் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான  ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 80-க்கும் மேற்பட்ட சகோதரிகள் பங்கேற்றனர்; சகோதரி எல்ஸிபா தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், தனிப்பட்ட முறையில் பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் தேவன் உதவிசெய்தார். வடமேற்கு மண்டலத்தின் பணித்தளங்களில் பெண்களிடையே செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஜுலை 23 ஜுன் 13 அன்று பஹாகா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒருநாள் கூடுகையில் 80 வாலிபர் பங்கேற்றனர்; இக்கூடுகையில் சகோ. பிரதுமன் மற்றும் சகோ. ரூபன் ஆகியோர் வாலிபருக்கேற்ற செய்தியை வேத வசனங்களின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டனர். ஜெப வேளையின்போது வாலிபரில் பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். இப்பணித்தள வாலிபர்கள் பரமனைக் கண்டுகொள்ள ஜெபிப்போம். 

ஜுலை 24 பெத்தியா, பஹாகா, ராம்நகர் மற்றும் ஜோகபட்டி ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 25 பேர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 50 கிராமங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் வாயிலாக ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், கிராமங்களில் சுற்றித் திரியும் சிறுவர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் மற்றும் அவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.  

ஜுலை 25 பீரோ பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். இக்கூடுகையில் சகோ. வீரேந்திர குமார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்காகவும் மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 26 கோரஷான் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையின் மூலமாக விசுவாசிகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும், ஜுன் 15 அன்று, சகோதரிகளுக்கான சீஷத்துவ பயிற்சியினை நிறைவுசெய்த 8-வது அணியினருக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியினை நடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார். பயிற்சிபெற்றோர் மூலமாக பணித்தளங்களில் வரும் நாட்களில் ஆத்தும அறுவடை பெருக ஜெபிப்போம்.