வடமேற்கு மண்டலம்
🔆 மே 16 அன்று ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒரு நாள் கன்வென்ஷன் கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது; சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் சாமுவேல் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.
🔆 தொடர்ந்து, மே 17 அன்று பெத்தியா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒரு நாள் சிறப்பு கூட்டத்தில் 100 வாலிப சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திலும் சென்னையைச் சேர்ந்த சகோ. ஜான் சாமுவேல் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டு, வாலிபர்களின் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தார். ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தனர். பங்கேற்ற ஒவ்வொரு வாலிப சகோதர சகோதரிகளுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது.
🔆 ரிவீல்கஞ்ச், கயாம்நகர், பட்டௌலி, ரத்நாத் மற்றும் பாவன் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகைகளிலும் மற்றும் சாரியா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளிலும் நூற்றுக்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத ஜனங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் இணைந்து ஜெபித்தனர்.
🔆 எக்மா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். போதகர் ரபீந்த்ரா இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும், குறிப்பாகப் பெற்றோருக்கும் இக்கூடுகை பிரயோஜனமாயமைந்தது.
🔆 சிவான், கதானி, பெத்தியா, சன்பாட்டியா, பைரோகஞ்ச் மற்றும் ராம்நகர் ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட 42 பேர், கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கு மகிமை!
🔆 ஞாயிறுப் பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான நற்செய்திக் குழு ஊழியர்களின் வாயிலாக பணித்தளங்களில் உள்ள சிறுவர் சிறுமியருக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இவ்வூழியங்களின் மூலம், தியோரியா, பைரியா, நவ்டான், ஜெக்தீஷ்பூர், கோரஷான் மற்றும் பகாஹா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் சிறுவர் சிறுமியர் சந்திக்கப்பட்டனர்.
🔆 மே 8 அன்று பாலிக்கான் பணித்தளத்திலும் மற்றும் குனல் பணித்தளத்திலும் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, மே 14 அன்று சிவான் மாவட்டத்தின் தண்ட்வா பணித்தளத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட சுவிசேஷக் கூட்டத்திலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்தனர். கூட்டத்தைத் தொடர்ந்து, வீடுகளைச் சந்தித்து ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.
🔆 ஸ்ரீ;ரீநகர் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் மே 11 அன்று கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சகோ. ராகேஷ் ஜெபத்துடன் ஊழியர் இல்லத்தைத் திறந்துவைத்தார். பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
🔆 பைரோகஞ்ச் பணித்தளத்தில் தொலைதூர மருத்துவ மையத்தின் வாயிலாக 200 பேருக்கு மருத்துவ உதவியுடன் கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
🔆 நவ்டான் மற்றும் போரியா ஆகிய பணித்தளங்களில் ஆலயங்கள் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலங்கள் விரைவில் வாங்கப்படவும், சாண்டி மற்றும் ரிவீல்கஞ்ச் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் நற்செய்திக் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.