ஏப்ரல் 21'ராம்நகர், பகாஹா, பைரோகஞ்ச், ரக்சௌல் மற்றும் சன்சௌரா பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஊழியங்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக, சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்தவும், வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்கவும், ஒழுக்க நெறிகளைப் போதிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், சிறுவர்களில் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 22 'சப்ரா, பிஹியா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையில் 100 விசுவாசிகளும், சரையா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 45 விசுவாசிகளும் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். ஷாபூர் மற்றும் பெத்தியா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் 220 பேர் பங்கேற்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர். தொடர்ந்து, பகாஹா பணித்தளத்தில் நடைபெற்ற வீட்டுக் கூட்டத்தில் 30 பேரும், மோத்திஹாரி ருலாஹி சபையில் நடைபெற்ற இரவு கூட்டத்தில் 50 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் வீட்டுக் கூடுகைகள் அதிகம் தொடங்கப்படவும், வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருக்கும் உபவாச மற்றும் சிறப்புக் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 23 'பைரோகஞ்ச் பணித்தளத்தில் மார்ச் 5 அன்று நடைபெற்ற குடும்பக் கூடுகையில் 30 குடும்பத்தினர் பங்கேற்றனர். தேவ செய்தியுடன், குடும்ப வாழ்விற்கான ஆலோசனைகளையும் கூடவே அளித்து, அவர்களை ஜெபத்தில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள ஊழியர்களின் பயண பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 24 'மார்ச் 8 மற்றும் 17 ஆகிய தினங்கள் சன்பட்டியா, பகாஹா மற்றும் நாராயன்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 155 பெண்கள் பங்கேற்றனர். மேலும், ராம்நகர் மற்றும் பகாஹா பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர்களுக்கான கூடுகையில் 135 வாலிபர்கள் கலந்துகொண்டனர். ருலாஹி பணித்தளத்தில் ஊழியர் இல்லப் பணிகளை மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், வாலிபர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 25 'பணித்தளங்களில் புதிதாக கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 109 பேர், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஆராதனைக்கு புதிதாக வந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காகவும், பணித்தளங்களில் ஊழியங்களுக்கு திறந்த வாசல்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.
